மத்திய படை பாதுகாப்பு கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மனு
மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்கக் கோரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய கமிசனுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு அனுப்பியுள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைப்பதில் முறைகேடு நடந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர். சிறுசேமிப்புத் துறை உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த உமாசங்கர், சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தடை உத்தரவு பெற்றார். பொய்யான சாதி சான்றிதழ் அளித்திருப்பதாகக் கூறி, இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, டெல்லியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய கமிசனுக்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு நான் பணியாற்றி வந்தேன். நேர்மையாகவும், நியாயமாகவும் நான் பணியாற்றியதை விரும்பாமல் தொடர்ந்து என்னை இடமாற்றம் செய்து வந்தனர். என் மீது, அகில இந்திய அரசுப் பணி சட்டம், மக்கள் சேவகர் விசாரணைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு உட்பட்டு எந்தவிதமான விசாரணையையும் தமிழக அரசு எடுக்கட்டும். ஆனால் அதைச் செய்ய அரசுக்குத் தைரியம் இல்லை. மாறாக என் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு முதல்வர் காவல்துறையை நிர்பந்தித்து வருகிறார். தற்போதைய முதல்வர் தலைமையிலான தமிழக அரசு சகிப்புத்தன்மை அற்றதாக உள்ளது. காரணம், மாறன் சகோதரர்களுக்கு எதிராகவும், இடிஎல் இன்பிராஸ்டிரக்சரில் நடந்த முறைகேடுகளை நான் அம்பலப்படுத்தியதுமே காரணம். இதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கும் தொடர்பு உண்டு. இந்த ஊழலில் மத்தியில் உள்ள ஒரு திமுக அமைச்சருக்கும் பங்கு உண்டு. இதன் காரணமாகவே அரசு அதிகாரத்தை தமிழக அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
எனது சாதிச் சான்றிதழ் தொடர்பாக என் மீதான விசாரணை எதுவாக இருந்தாலும், அதை மத்திய ஊழல் ஆணையமோ அல்லது சிபிஐயோ நடத்த வேண்டும். அல்லது தமிழக அரசு சம்பந்தப்படாத ஏதாவது ஒரு ஏஜென்சி விசாரணையை நடத்த வேண்டும். மேலும், நான் மத்திய அரசின் துறை ஏதாவது ஒன்றில் பணியாற்ற உத்தரவிட வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மத்திய படைகள் மூலம் போதிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு உமாசங்கர் கூறியுள்ளார்.
ந்நிலையில் உமாசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் பசுபதிபாண்டியன் பேசினார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை சஸ்பெண்ட் செய்த தமிழக அரசை கண்டித்து நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில சட்ட ஆலோசகர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். தலைவர் முருகேசபாண்டியன் வரவேற்றார். நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன் பேசியதாவது:-
நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றவர் உமாசங்கர். ஊழலை கண்டுபிடித்து கூறிய காரணத்தால் உள்நோக்கத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் சாதிச்சான்றை மாற்றி வழங்கியதாக அரசு கூறுகிறது. அவர் பணியில் இருந்த இத்தனை ஆண்டுகள் இது தெரியவில்லையா. சம்பந்தப்பட்ட துறை இதை கண்டுபிடிக்காதது ஏன். உமாசங்கர் மீதான நடவடிக்கையை அரசு ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் மாவட்ட தலைநகரங்களிலும், சென்னையிலும் போராட்டம் நடக்கும். இதர அமைப்புகளுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். எஸ்.சி.எஸ்.டி., பின்னடைவு காலியிடங்களை அரசு நிரப்ப வேண்டும். இவ்வாறு பசுபதிபாண்டியன் பேசினார். இதில் தமிழகமெங்கும் இருந்து வந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.