விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூரில் வயல்வெளியில், ஆட்டு கிடைக்கு காவல் இருந்த ராமு என்பவரை, மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அவருடன் இருந்த இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மாத்தூர் மேடாங்குளம் கண்மாய் கரையில், முத்துக்கிருஷ்ணனின் வயல்வெளியில் மகாராஜபுரம் அண்ணாநகரை சேர்ந்த மூக்கையா (57), அவரது மகன் ராமு(21), மாத்தூர் முத்துராஜ் ஆகியோர் ஆட்டு கிடை போட்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, மூவரும் ஆட்டு கிடையை சுற்றி காவலுக்கு படுத்திருந்தனர். இரவு 12 மணியளவில், அங்கு வந்த 10 பேர் மூக்கையாவையும், முத்துராஜையும் அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க, ஓடிவந்த ராமு மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். குண்டுவெடித்ததில், ராமு படுகாயமடைந்தார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, கிராம மக்கள் ஓடிவந்தனர். ஆனால், வெடிகுண்டுகளுடன் மர்மநபர்கள் இருப்பதையறிந்து சற்று தொலைவிலேயே நின்று விட்டனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் வருவதற்கு முன் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். வழியிலேயே ராமு இறந்தார். சம்பவ இடத்தை ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் எஸ்.பி., பிரபாகரன் பார்வையிட்டனர். விருதுநகரிலிருந்து வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்பநாய் ஏஜான்சிஎ சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடி, நின்றுவிட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலையாளிகள் யார், எதற்காக கொலைசெய்தனர் என, தெரியவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், வ.புதுப்பட்டி கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டதையடுத்து, இப்பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் கொலை சம்பவம் நடந்திருப்பது அப்பகுதிகளில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வ. புதுப்பட்டி சம்பவத்திற்கும், மாத்தூர் சம்பவத்திற்கும் தொடர்பில்லை என, போலீசார் தெரிவித்தனர். மதுரை ஆஸ்பத்திரியில் குற்றவாளி சிகிச்சை? ராமு கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கோட்டையூர் தம்பிபட்டியைச் சேர்ந்த சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கோட்டையூரை சேர்ந்த பாண்டி(30) என்பவர் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதையறிந்த வத்திராயிருப்பு போலீசார் இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்புடையவராக இருக்கலாம், என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தினர். கல்குவாரியில் நடந்த விபத்தில், தனது கை விரல்கள் சேதமடைந்ததாக அவர், போலீசாரிடம் கூறினார். இதுபோன்ற சம்பவம் சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்திலேயே நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய போலீசார், பாண்டியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta